ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-14 18:45 GMT

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரை சேர்ந்தவர் ஆமினாள். இவர் நேற்று தனது கணவர் நாகூர்மீரான் மற்றும் 2 மகன்களுடன் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர்கள் திடீரென தங்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்றவர்களின் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஏற்கனவே நிலப்பிரச்சினை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்து இருந்ததும், அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அங்கு வந்து ஆமினாளிடம் விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் அதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதையும் மீறி ஒரே குடும்பத்தில் 4 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்