முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கைது

புதுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி குடும்பத்தினரை கட்டுப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-08-24 18:32 GMT

கொள்ளை சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே ஆவுடையார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 65). இவர் பால்வளத்துறையில் கூட்டுறவு சார்பதிவாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சம்பவத்தன்று இரவு வீட்டில் மனைவி அன்னம், மருமகள் ரமாபிரபா ஆகியோருடன் இருந்தார். அப்போது மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் மர்மநபர்கள் முகமூடி அணிந்து, ஆயுதங்களுடன் ஆதிமூலத்தின் வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் அவர்கள் 3 பேரையும் கட்டிப்போட்டு ரமாபிரபா அணிந்திருந்த 15 பவுன் நகைகளையும், பீரோவில் இருந்த ரூ.82 ஆயிரத்து 500 மற்றும் 2 செல்போன்களையும் கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் புதுக்கோட்டை அசோக்நகர் பகுதியில் கணேஷ்நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் திருச்சியை சேர்ந்த ரஞ்சித் (வயது 21), மணிகண்டன் (23), புதுக்கோட்டையை சேர்ந்த ஆசாத் (36), லட்சுமி நாராயணன் (24) ஆகியோர் என தெரிந்தது. மேலும் அவர்கள் ஆவுடையார்பட்டியில் ஆதிமூலம் வீட்டில் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 7 பவுன் நகைகள், 2 செல்போன், 4 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வீடுகளை நோட்டமிட்டு...

கைதான 4 பேர் மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவர்கள் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு செயல்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்