ஆற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

பட்டிவீரன்பட்டி அருகே ஆற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-04-08 16:17 GMT

தேனி பூதிப்புரத்தை சேர்ந்தவர் போஜன் (வயது 72). இவர், தேனியில் உள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே நூற்பாலையில் பணிபுரியும் தேனியை சேர்ந்த கண்ணன் (72), ரமேஷ் (44) ஆகியோருடன் பருத்தி கொள்முதல் செய்ய கன்னிவாடிக்கு காரில் வந்தார். காரை, தேனி அருகே உள்ள சில்வார்பட்டியை சேர்ந்த சேகர் ஓட்டினார்.

கன்னிவாடியில் பருத்தி கொள்முதலை முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் மருதாநதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், மருதாநதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த கண்ணன், ரமேஷ், போஜன், சேகர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்