4 கிராம் தங்க தாலி, சீர்வரிசை பொருட்களுடன்: வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்

வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவில் சார்பில் 2 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

Update: 2023-06-06 08:23 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படியும் இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், தேர்கள், தெப்பக்குளங்களை புனரமைத்தல், கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் 2023- 2024-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், ''கோவில்களில் திருமணம் செய்து கொள்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க தாலி வழங்கப்படும்'' என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி சென்னை, கோயம்பேடு, குறுங்காலீசுவரர் கோவில் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க தாலியுடன் திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து சென்னை, வில்லிவாக்கம், அகத்தீசுவரர் சுவாமி கோவிலில் 2 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க தாலியுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதுவரை கோவில்கள் சார்பில் 100 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை கமிஷனர் கி.ரேணுகாதேவி, கொளத்தூர் காவல் துறை துணை கமிஷனர் சி.சக்திவேல், காவல் துறை உதவி கமிஷனர் ராகவேந்திரன் கே.ரவி, மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் சாவித்திரி, இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் எம்.பாஸ்கரன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை தலைவர் பி.சிம்மசந்திரன், பாடி திருவல்லீசுவரர் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வானவில் விஜய், மாநகராட்சி கவுன்சிலர் சுதா தீனதயாளன், கோவில் செயல் அலுவலர்கள் அ.குமரேசன், கே.பாரதிராஜா, ஆர்.கேசவராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்