கடலூர் மாவட்டத்தில்4 போலி டாக்டர்கள் கைது

கடலூர் மாவட்டத்தில் 4 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-09 19:00 GMT

கடலூர் மாவட்டத்தில் முறையான ஆங்கில மருத்துவம் படிக்காமலும், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமலும் சிலர் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் உத்தரவின் பேரில், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு மேற்பார்வையில் நேற்று மருத்துவக்குழுவினர் மாவட்டம் முழுவதும் போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி கடலூரில் மாவட்ட காசநோய் மைய துணை இயக்குனர் கருணாகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டை சேர்ந்த குணசேகரன் (வயது 52) என்பவர் புதுப்பாளையத்தில் தான் நடத்தி வரும் மருந்தகத்தில் எவ்வித ஆங்கில மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிந்தது.

3 பேர் கைது

இதேபோல் கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் புதுநகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மதியழகன் (43) என்பவர் வண்டிப்பாளையத்தில் எந்தவித முறையான ஆங்கில மருத்துவம் படிக்காமல், கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு போலியாக மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதுதவிர முதுநகர் பச்சையாங்குப்பத்தில் கொய்யாத்தோப்பு தெருவை சேர்ந்த காந்தரூபன் (61) என்பவர் டிப்ளமோ ஹெட்டேக் ஹோம் மருத்துவம் படித்து விட்டு, கிளினிக் நடத்தி, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

ஆனால் அவரிடம் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட ஆதாரம், பதிவு சான்றிதழ் எதுவும் இல்லை. ஆனால் அவர் கிளினிக்கில் மக்களுக்கு ஊசி, குளுக்கோஸ், மாத்திரைகள், கட்டுகட்டும் துணிகள், மருந்து பொருட்களை வைத்து போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிந்தது. இது பற்றி கருணாகரன் கடலூர் புதுநகர், முதுநகர், துறைமுகம் ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

பெண் கைது

இதேபோல் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி உதவி மருத்துவர் விக்னேஸ்வரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் போலீசாருடன் சென்று அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள மருந்தகத்தில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு புதுப்பேட்டை கரும்பூரை சேர்ந்த சீனுவாசன் மனைவி சத்யா (35) என்பவர் எவ்வித ஆங்கில மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு போலியாக மருத்துவம் பார்த்தது தெரிந்தது. இது பற்றி விக்னேஸ்வரன் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்