திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 749 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 749 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

Update: 2023-04-30 19:56 GMT

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 749 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

நலத்திட்ட உதவிகள்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் 65 பயனாளிகளுக்கு தலா ரூ.83 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.54 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 250 பயனாளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரத்து 549 வீதம் ரூ.33 லட்சத்து 87 ஆயிரத்து 250 மதிப்பீட்டில் வாய்பேச இயலாத மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகளையும், 15 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் வீதம் ரூ.15 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 37 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், என மொத்தம் 749 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள்

இதை தொடர்ந்து திருச்சி காட்டூர் மாண்ட் போர்ட் பள்ளியில் நடைபெற்ற தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழாவில் அரியலூர், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி உள்ளடக்கிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்கள். தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் 12,631 மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், சுயநிதி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், இளம் மழலையர் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டம் அல்லாத பிற வாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக அரியலூர், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி உள்ளட்டக்கிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரச் சான்றுகள் வழங்கப்பட்டது.

உய்யகொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணி

இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி உய்ய கொண்டான் வாய்க்கால் தூர் வாரும் பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது,

டெல்டா விவசாயிகளை பாதுகாப்பதற்காக நீர்வளத்துறை சார்பில் தூர்ந்து போன வாய்க்கால்களை முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் தேவையை உணர்ந்து முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். திருவெறும்பூர் தொகுதியில் ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் 26 பணிகள் நடைபெறுகிறது. ஜூன் 3-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள், இந்த விழா நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்குள் இந்த பணி நிறைவடையும் என்றார்.

விழாவில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் நீர்வளத்துறை ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ், சோழமாதேவி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்