19,750 பேருக்கு ஆதார் மூலம் ரூ.4½ கோடி பரிவர்த்தனை
கும்பகோணம் கோட்ட தபால் நிலையங்களில் 19,750 பேருக்கு ஆதார் மூலம் ரூ.4½கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக கும்பகோணம் கோட்ட தபால் கண்காணிப்பாளர் கும்பசாமி தெரிவித்துள்ளார்.
கும்பகோணம்:
தபால் சமூக வளர்ச்சி
கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் தபால் சமூக வளர்ச்சி விழா நடந்தது. இந்த விழாவிற்கு மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் தலைவர் ராமசுவாமி முன்னிலை வகித்தார். தபால் கோட்ட கண்காணிப்பாளர் கும்பசாமி வரவேற்றார்.
இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய தபால் ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும் கவுரவிக்கப்பட்டனர். செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்த பெண் குழந்தைகளுக்கும், மகிளா சம்மன் சேவைத் திட்டத்தில் இணைந்த பெண்களுக்கும் புதிய கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தபால் வங்கி கணக்குகள்
கோட்டக் கண்காணிப்பாளர் கும்பசாமி பேசுகையில், கும்பகோணம் கோட்டத்தில் இந்த நிதியாண்டில் 26 ஆயிரத்து 485 சேமிப்பு கணக்குகளும், 28 ஆயிரத்து 596 பேருக்கு ஆதார் சேவையும், 260 பேருக்கு விபத்து காப்பீடுகளும், 13 ஆயிரத்து 418 தபால் வங்கி கணக்குகளும், 683 பேருக்கு மின்னணு உயிர் வாழ் சான்றிதழும், 19 ஆயிரத்து 750 பேருக்கு ஆதார் மூலம் ரூ.4 கோடியே 66 லட்சத்து 87 ஆயிரத்து 363 பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டில் 2 ஆயிரத்து 562 பாலிசிதாரர்கள் மூலம் புதிய காப்பீட்டிற்கான பிரிமீயம் தொகை ரூ.1 கோடியே 27 லட்சமும், 3 ஆயிரத்து 828 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன என்றார். முடிவில் கும்பகோணம் கோட்ட தலைமை துணை கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் நன்றி கூறினார்.