டிரைவரை தாக்கிய 4 பேர் கைது
கம்பத்தில் டிரைவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 54). ஜீப் டிரைவர். நேற்று முன்தினம் மாலை இவர், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் இருந்து ஜீப்பில் ஆட்களை ஏற்றிக்கொண்டு காமயகவுண்டன்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஜீப்பிற்கு பின்னால் கார் வந்தது. அந்த கார் ஜீப்பை முந்தி செல்ல முயன்றபோது, அதில் வந்தவர்கள் கூச்சலிட்டு சென்றனர். பின்னர் அந்த கார் கம்பம் வாவேர் பள்ளிவாசல் அருகே நின்று கொண்டிருந்தது.
இதையடுத்து ஜீப்பை நிறுத்திய ஜெயராஜ் காரில் இருந்த வாலிபர்களிடம் இதுகுறித்து கேட்டார். அப்போது அந்த வாலிபர்கள் ஜெயராஜை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கம்பம் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் நெடுங்கண்டத்தை சேர்ந்த பிரபு (29), ஜெயபால் (29), ஜெயபாண்டி (22), மகேஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.