மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 374 மனுக்கள் பெறப்பட்டன
தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 374 மனுக்களை பரிசீலனை செய்து உரிய பதில் அளிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.;
தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 374 மனுக்களை பரிசீலனை செய்து உரிய பதில் அளிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், சமூக நலத்துறை துணை கலெக்டர் ஷீலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 374 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய பதிலளிக்குமாறு அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் செலவில் தக்க செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை கலெக்டர் வழங்கினார்.
அதிகாரி மீது புகார்
செங்கோட்டை பார்டரில் இயங்கி வரும் பிரபல புரோட்டா கடை உரிமையாளர் கோதர் பாவா கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில, நாங்கள் சுமார் 50 ஆண்டுகளாக செங்கோட்டையில் புரோட்டா கடை நடத்தி வருகிறோம். தரமான முறையில் உணவுப்பொருட்களை வழங்கி வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு அலுவலர் எங்களது கடையில் சோதனை நடத்தினார். அப்போது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கோழியை எடுத்து எந்தவித பரிசோதனைக்கும் அனுப்பாமல் தன்னிச்சையாக கெட்டுப்போனது என்று கூறி பினாயில் ஊற்றி அழித்தார். யாரோ தூண்டுதலின் பேரில் அதிகாரி இவ்வாறு செயல்பட்டு உள்ளதாக எங்களுக்கு தெரிகிறது. எனவே அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
சுரண்டை நகராட்சி 25-வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் சார்பில் கொடுத்துள்ள மனுவில், "எங்களது பகுதியில் மின் மயானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதை மாற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.