மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 363 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சியில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 322 மனுக்கள் பெறப்பட்டன;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை கேட்டு மொத்தம் 363 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற கலெக்டர் ஸ்ரீதர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகே செம்மணங்கூரை சேர்ந்த மாயவன் என்பவரது மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதைபோல் சேந்தநாடு அருகே ஒல்லியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரது மகன் ஏரியில் மூழ்கி இறந்தார். இதையடுத்து இருவரின் குடும்பத்துக்கும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தண்டுவடம் பாதித்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் அதிநவீன நியூ மோசன் சக்கர நாற்காலிகளை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.