உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல்
மயிலாடுதுறையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.;
மயிலாடுதுறையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு கூறிப்பில் கூறியிருப்பதாவது:-
35 வாகனங்கள் பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கலெக்டர் லலிதா உத்தரவின்பேரில் கடந்த மாதம் எனது தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மயிலாடுதுறை ராம்குமார், சீர்காழி விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் 920 வாகனங்களை சோதனை செய்து 205 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 35 வாகனங்கள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலக வளாகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகன உரிமையாளர்களுக்கு ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
ஓட்டுனர் உரிமம்
வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனங்களுக்கு முறையான அனுமதி சீட்டு பெற்றும் எப்.சி., இன்சூரன்ஸ், சாலை வரி செலுத்திய பின்பு முறையான ஓட்டுனர் உரிமம் பெற்ற நபர்களுடன் வாகனத்தை இயக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும், 4 சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும்.
படிகளில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது
மதுகுடித்துவிட்டும், செல்போன் பேசிக்கொண்டும் வாகனத்தை ஓட்டக் கூடாது. மாணவர்கள் பஸ்களில் படியில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது.
தனியார் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துள்ள கார்களை வாடகைக்கு பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.