கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி கோவில் நிலம் மீட்பு

கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.;

Update: 2022-07-28 18:44 GMT

சென்னை,

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் ஊராட்சியில் பழைய மாமல்லபுரம் சாலையில் செங்கண்மாலீஸ்வரர் கோவில் உள்ளது. தையூர் கிராமத்தில் இந்த கோவிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் 74 சென்ட் நிலம் உள்ளது. இதில் 5 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான ஏழை மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இந்த வீடுகள் போக மீதி இருந்த 6 ஏக்கர் 74 சென்ட் நிலம் கோவில் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமித்து சாலை அமைப்பதாகவும், விளையாட்டு மைதானம் அமைப்பதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து காஞ்சீபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உத்தரவின்பேரில் செங்கல்பட்டு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செங்கண்மாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் கோவில் ஊழியர்கள் நேற்று அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

ரூ.35 கோடி மதிப்பு

பின்னர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 3 ஆயிரம் சதுர அடி பரப்பிலான சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். மேலும், விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக 5 ஏக்கர் நிலத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டது. இந்த இடத்தையும் கைப்பற்றிய அதிகாரிகள், அந்த இடத்தில், "இது கோவிலுக்கு சொந்தமான இடம். அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் "என்று எச்சரிக்கை பலகை வைத்தனர். இந்த ஆக்கிரமிப்பு குறித்து செயல் அலுவலர் சரவணன் கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.35 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்