மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 343 மனுக்கள் குவிந்தன

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 343 மனுக்கள் குவிந்தன.

Update: 2023-10-17 00:00 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 343 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

வீட்டுமனை பட்டா

இந்த கூட்டத்தில், ஆண்டிப்பட்டி, சக்கம்பட்டி காளியம்மன் கோவில் சுப்புகாலனி பகுதியை சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.

ஜெயமங்கலம் அருகே உள்ள சிந்துவம்பட்டியை சேர்ந்த மக்கள் சிலர் கொடுத்த மனுவில், "ஜெயமங்கலம் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவின் போது நடந்த சம்பவத்தில், அதில் தொடர்பு இல்லாத நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தவறு செய்யாத நபர்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல் கலெக்டர் அலுவலகம் முன்பு புரட்சி தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவரை சாதியை சொல்லி திட்டிய ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் அருந்தமிழரசு தலைமை தாங்கினார். இதில், தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்