தாவரவியல் பூங்காவுக்கு 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
தொடர் விடுமுறையில் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.;
ஊட்டி,
சுதந்திர தினத்தையொட்டி 13, 14, 15-ந் தேதிகள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை கழிக்க மலைகளின் அரசியான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மலர்களை கண்டு ரசித்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். படகு இ்ல்ல சாலையில் குதிரை சவாரி சென்று குதூகலம் அடைந்தனர். இதேபோல் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் விடுமுறையான 3 நாட்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.