மேட்டூர் அணைக்கு நீர்வரத்துவினாடிக்கு 334 கனஅடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 334 கனஅடியாக குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்துக்கு ஓரிரு நாளில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2023-10-06 18:53 GMT

மேட்டூர்

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையாத காரணத்தால் தமிழகம், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைந்தது.

மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து தொடர்ந்து பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அந்த தண்ணீரும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது.

தண்ணீர் திறப்பு நிறுத்த வாய்ப்பு

கர்நாடகத்தில் இருந்து நேற்று தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 489 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் மேட்டூர் அணைக்கு நேற்றைய நிலவரப்படி நீர்வரத்தானது வினாடிக்கு 500 கனஅடிக்கு கீழ் குறைந்தது. அதாவது வினாடிக்கு 334 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், டெல்டா பாசனத்துக்கு இன்னும் ஓரிரு நாளில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 93.5 டி.எம்.சி.யில் தற்போது 8.7 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

கடந்த காலங்களில்...

எனவே அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மேட்டூர் அணையின் தண்ணீரை கொண்டே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால் குடிநீர் தேவையே பூர்த்தியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் சரிவர பெய்யாமல்தான் இருந்து இருக்கிறது. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்காமல் போனால் குடிநீர் தேவையை சமாளிப்பதே சிரமம் ஆகி விடும். எனவே சேலம், நாமக்கல் மாவட்ட மக்கள் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்