சென்னை மாநகர், புறநகர் பகுதியில் மிக மோசமான நிலையில் 324 சாலைகள் - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 324 சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-10-11 06:07 GMT

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள மோசமான சாலைகளை அந்தந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போட்டோ எடுத்து அறப்போர் இயக்கத்தின் இணையதளத்துக்கு தெரிவிக்க கேட்டுக்கொண்டோம்.

அதன்படி 212 ஆர்வலர்கள் தங்கள் பகுதியில் உள்ள மோசமான சாலைகளின் போட்டோக்களை பதிவு செய்தனர்.

இதன்மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 192 சாலைகளும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளில் 132 சாலைகளும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் 39 சாலைகளும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 26 சாலைகளும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 22 சாலைகளும், ராயபுரம் மற்றும் பெருங்குடி மண்டலத்தில் தலா 21 சாலைகளும், அம்பத்தூர் மண்டலத்தில் 20 சாலைகளும் மிக மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மணலி மண்டலத்தில் கடந்த ஆண்டு புதிதாக போடப்பட்ட டி.பி.பி. பர்மா சாலை ஒரே ஆண்டில் நொறுங்கி போனது அதிர்ச்சி அளிக்கிறது. அதிக போக்குவரத்தை கொண்ட மின்ட் சாலை, வேளச்சேரி மேடவாக்கம் சாலையை பள்ளிக்கரணை உட்புற சாலைகளுடன் இணைக்கும் காமக்கோடி பிரதான சாலை ஆகியவை மிகப்பெரிய அளவில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

சென்னை புறநகர் பகுதிகளான மேடவாக்கம் பெரும்பாக்கம், அகரம், தென் சித்தாலப்பாக்கம், கோவிலம்பாக்கம் ஆகிய கிராம ஊராட்சிகளில் 83 சாலைகள் மிக மோசமாக இருப்பது தெரிகிறது.

புதிதாக வளர்ச்சி அடையும் பகுதிகளில் சி.எம்.டி.ஏ. எனப்படும் சென்னை பெருநகர வளச்சி குழுமம் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் உள்ளது. எனவே, எங்களது தரவில் கண்டறியப்பட்டுள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும். மழைக்கு முன்பாக எத்தனை சாலைகளை மீண்டும் புதிதாக போட முடியுமோ அவற்றை போட வேண்டும்.

மற்ற சாலைகளை பொறுத்தமட்டில் தற்காலிகமாக மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், மழைக்காலத்திற்கு முன்பாக புதிதாக போட முடியாத சாலைகள் மற்றும் வடிகால் பணிகளுக்கு மழைக்காலம் முடிவதற்கு முன்பாகவே நிதியை ஒதுக்கி டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு மழைக்காலம் முடிந்த பிறகு உடனடியாக அந்த பணிகளை தொடங்கவும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

பெரிய ஜல்லி மண்ணை கொட்டி சாலையை மராமத்து (பேட்ச் ஒர்க்) செய்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சதுரங்கமாக மில்லிங் செய்து சாலை தற்போது இருக்கும் அளவிற்கு தார் பயன்படுத்தி மராமத்து செய்வது முக்கியம் எனவும், சாலைகளின் தரத்தை உறுதி செய்யவும் அரசை வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்