சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 3,155 பேர் எழுதுகின்றனர்
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 3,155 பேர் எழுதுகின்றனர்.;
தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான தேர்வுகள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் இன்று (சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கண்ட தேர்வினை எழுத 3 ஆயிரத்து 155 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுகள் பெரம்பலூரில் 6 தேர்வு மையங்களில் இன்று நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை எழுத்து தேர்வும், மதியம் 3.30 முதல் 5.10 வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெற உள்ளது. பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 6 தேர்வு மையங்களில், 158 அறைகளில் தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அழைப்பு கடிதத்தினை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.