தூத்துக்குடி கடலில் ஒரே நாளில் 300 டன் மீன்கள் பிடிபட்டன

தூத்துக்குடியில் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று ஒரே நாளில் 300 டன் மீன்கள் பிடிபட்டன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-06-16 11:53 GMT

தூத்துக்குடியில் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று ஒரே நாளில் 300 டன் மீன்கள் பிடிபட்டன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. நேற்று முன்தினம் தடைக்காலம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் காலையில் கடலுக்கு சென்றனர். மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 126 விசைப்படகுகளும், தருவைகுளத்தில் இருந்து 94 விசைப்படகுகளும், வேம்பாரில் இருந்து 40 விசைப்படகுகள் ஆக மொத்தம் 260 விசைப்படகுகளில் மீனவர்கள் புறப்பட்டு சென்றனர்.

300 டன்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விசைப்படகுகள் இரவு 7.30 மணி முதல் கரைக்கு திரும்பி வரத் தொடங்கினர். இதில் ஏராளமான மீன்கள் பிடிபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சில படகுகளில் போதுமான மீன்கள் கிடைக்கவில்லை என்ற நிலையும் ஏற்பட்டது. மீனவர்கள் வலையில் பெரிய மீன்கள் அதிக அளவில் பிடிபட்டு இருந்தன. பாறை, ஊளி, விளமீன், நெத்திலி, நகரை, கணவாய், சீலா உள்ளிட்ட மீன்கள் அதிகமாக பிடிபட்டன. நேற்று ஒரே நாளில் மொத்தம் சுமார் 300 டன் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனைக்காக வந்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கேரளா வியாபாரிகள் வருகை

இந்த மீன்கள் அனைத்தும் அதற்கான மீன் ஏலக்கூடத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. மேற்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் தொடங்கி இருப்பதால் கேரளா பகுதியில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் தூத்துக்குடிக்கு வந்து இருந்தனர். இதனால் மீன்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்