இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல்

படகில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-11-23 02:12 IST

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து, மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் உதவியுடன் ரோந்து கப்பல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு மண்டபம் அருகே உள்ள மனோலி தீவு அருகே ரோந்து சென்றனர்.

அப்போது நடுக்கடல் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த தமிழகத்தைச் சேர்ந்த மீன்பிடி படகை நிறுத்தி சோதனை செய்தனர்.

300 கிலோ கஞ்சா

இதில் அந்த படகில் இருந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட பார்சல்களில் இருந்த 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்றதாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளையை சேர்ந்த இனியாஸ்(வயது 42), வேலு(25), கீழக்கரையை சேர்ந்த செய்யது(47), கண்ணன்(27) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து அரை லிட்டர் போதை எண்ணெய், ஜி.பி.எஸ் கருவிகள் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

பிடிபட்டுள்ள கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்