கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி
விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீடு தொகையை அரசு ஏற்பதுடன் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
தமிழகத்தில் தொடர் மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகமெங்கும் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் 1½ லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் நெல் பயிரிட்ட சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பாசன நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
நிவாரணம் வழங்க நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்ட நிலங்கள் மழையில் மூழ்கியுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சீர்காழி மற்றும் பூம்புகார் தொகுதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்ததன் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தனி தீவுகளாக காட்சி அளிக்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மட்டும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இந்த மழையில் மாநிலம் முழுவதும் நெல்லுடன், வாழை, நிலக்கடலை மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அதிகாரிகளை நேரில் அனுப்பி, கணக்கெடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
விவசாயிகள் மனவேதனை
விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டு ஒரு மாத காலத்திற்குள் கனமழையால் தங்களுடைய உழைப்பு வீணாகி விட்டதே என்றும், தாங்கள் மேலும் கடன்காரர்களாக மாறிவிட்டோமே என்றும், தங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டதே என்றும் விவசாயிகள் மிகுந்த மனவேதனையுடன் தங்கள் மனக்குமுறலை எடுத்துரைக்கின்றனர்.
இந்த ஆண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி நாள் 15-11-2022 (நாளை) என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தாண்டு விவசாயிகள் கட்ட வேண்டிய காப்பீட்டுத் தொகையை மாநில அரசே ஏற்று பீரிமியத்தை செலுத்த வேண்டும்
வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் விவசாயிகளிடம் நேரில் சென்று, அவர்களது நிலங்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்போது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.