தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் புதிய வீடுகள் கட்டப்படும் - அமைச்சர் தா.மோ. அன்பரசன்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

Update: 2022-08-05 13:26 GMT

கடலூர்,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கடலூர் செம்மண்டலம் மறுக்கட்டுமான திட்டப் பகுதி பயனாளிகள் 117 பேருக்கு கருணைத்தொகை மற்றும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, 117 பயனாளிகளுக்கு தலா ரூ.24 ஆயிரம் வீதம் ரூ.28 லட்சம் கருணைத்தொகையை வழங்கி, தற்காலிக ஒதுக்கீடு ஆணையையும் வழங்கி பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

குடிசையில் வாழும் மக்கள் கான்கிரீட் வீட்டில் வசிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 1970-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தை கொண்டு வந்தார். கடந்த 1972-ம் ஆண்டில் கடலூர் செம்மண்டலத்தில் 117 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த கட்டிடம் சேதமடைந்து உள்ளதால், அதை இடித்து விட்டு ரூ.27 கோடியே 9 லட்சம் செலவில் 272 வீடுகள் புதிதாக கட்டப்படுகிறது. வீடுகளை காலி செய்து கொடுத்தால் 15 மாதத்தில் வீடு கட்டி உங்களிடம் சாவி ஒப்படைக்கப்படும்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடிசை மாற்று வாரியம் என்ற திட்டத்தை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக மாற்றி உள்ளார். தமிழகம் முழுவதும் இந்த வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில் பழுதடைந்த 30 ஆயிரம் வீடுகளை இடித்து விட்டு புதிதாக கட்ட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக ரூ.2400 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 15 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகிறது. கட்டித்தரப்படும் வீடுகள் 50 ஆண்டுக்கு இந்த வீடுகள் உறுதியாக இருக்கும்,

இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்