30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

போத்திரமங்கம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

Update: 2023-05-02 18:45 GMT


திட்டக்குடி

நேரடி நெல்கொள்முதல் நிலையம்

திட்டக்குடியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. போத்திரமங்கலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் அங்கு வைக்கப்பட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது.

இதை அறிந்து வந்த விவசாயிகள் மழையில் நனைந்த நெல்மூட்டைகளை பார்த்து வேதனை அடைந்தனர். பின்னர் கடப்பாறை மற்றும் மண்வெட்டி கொண்டு தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் வேதனை

கோழியூர், போத்திரமங்கலம், பட்டூர், கோடாங்குடி, எழுமாத்தூர் வையங்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்த நெற்பயிர்களை இங்குள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தான் விவசாயிகள் விற்பனை செய்வார்கள்.

ஆனால் தற்போது இங்கு மழை நீர் தேங்கி நெல் மூட்டைகள் வீணாகி உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் தற்போது மூட்டையில் உள்ள நெற்பயிர் நனைந்து உள்ளதால் மீண்டும் அவற்றை காய வைத்து தான் விற்பனை செய்ய வேண்டி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மேடான பகுதியில்...

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, இங்குள்ள கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை. இதனால் நெல் மூட்டைகள் தேக்கமடைந்தன. மேலும் நெல் கொள்முதல் நிலையம் பள்ளமான பகுதியில் இருக்கிறது. இதனால் லேசான மழை பெய்தாலே தண்ணீர் தேங்குகிறது. எனவே மேடான பகுதியில் சிமெண்டு தரையுடன் நெல்கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும். இது பற்றி தகவல் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நெல் கொள்முதல் நிலையத்துக்கு வரவில்லை.

மழையில் நனைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக விற்பனைக்கு அதிகாரிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்