நாமக்கல்லில் வாகன சோதனையில் 'ஹெல்மெட்' அணியாமல் வந்த 30 பேருக்கு அபராதம்

Update: 2023-06-23 18:45 GMT

நாமக்கல்லில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களில் மட்டும் நடந்த இருவேறு விபத்துகளில் பெண் பரிதாபமாக இறந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தி விபத்திற்கான காரணத்தை கண்டறிந்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் டாக்டர் உமா போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் குழுவினர் நாமக்கல் அரசு போக்குவரத்து பணிமனை அருகே ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் இரவு நேரங்களில் அந்த இடத்தில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் வேகத்தடை இருப்பது தெரியாத நிலை உள்ளதும், தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள் விபத்தில் சிக்கும் போது படுகாயம் அடைவதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கை நடத்தியதோடு, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர். அப்போது 100-க்கும் மேற்பட்ட 2 சக்கர வாகனங்களை தணிக்கை செய்ததோடு, தலைக்கவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு ரூ.1,000 வீதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டி வந்த 4 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்தனர். இதேபோல் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டு விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்