ஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை திரும்பும் பயணிகளுக்காக 30 மருத்துவ குழுக்கள் அமைப்பு
ஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை திரும்பும் பயணிகளுக்காக 30 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை, கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒடிசாவில் இருந்து 131 பயணிகள் சிறப்பு ரெயிலில் இன்று அதிகாலை 4.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது. இன்று மேலும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. பத்ரக்கிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1 மணிக்கு மேலும் ஒரு சிறப்பு ரெயில் புறப்படுகிறது.
இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை திரும்பும் பயணிகளுக்காக 30 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரின் மருத்துவம், இதர உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு மீட்பு குழு அமைத்துள்ளது. சென்னை திரும்பும் பயணிகளுக்காக 7 பேருந்துகள், 50 டாக்சிகள் 10 அவசர கால ஊர்தியும் தயார்நிலையில் உள்ளது. பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்ய வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.