வேளாண் உட்கட்டமைப்பில் கோவை மாவட்டத்திற்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு-கலெக்டர் சமீரன் தகவல்
வேளாண் உட்கட்டமைப்பில் கோவை மாவட்டத்திற்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார்.;
பொள்ளாச்சி
வேளாண் உட்கட்டமைப்பில் கோவை மாவட்டத்திற்கு ரூ.30 ேகாடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சமீரன் தெரிவித்து உள்ளார்.
கருத்தரங்கம்
வேளாண் உட்கட்டமைப்பு நிதி பெறுவது தொடர்பான கருத்தரங்கம் பொள்ளாச்சியில் நடந்து. இதற்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவா கூறியதாவது:- விவசாயிகள் உற்பத்தி செய்த விளைப் பொருட்கள் வீணாகாமல், மதிப்பு கூட்டி, லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் வேளாண் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிக அவசியம். அதற்கு வேளாண் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு வேளாண் உட்கட்டமைப்பு நிதி கடன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
13 ஆண்டுகள் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் தொழில் முனைவோர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வசதி செய்து தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூ.30 கோடி ஒதுக்கீடு
இந்த ஆண்டு வேளாண் உட்கட்டமைப்பு நிதியாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ.5.990 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்திற்கு சுமார் ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு 7 ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 3 சதவீதம் வட்டி குறைப்பு வழங்கப்படுகின்றது. ரூ.2 கோடிக்கு மேற்பட்ட கடனாக இருந்தால் ரூ.2 கோடி வரையிலான தொகைக்கு மட்டும் 3 சதவீதம் வட்டி குறைப்பு கட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கான உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. ஒரு தகுதி வாய்ந்த நிறுவனம் ஒரு இடத்தில் அல்லது பல்வேறு இடங்களில் திட்டங்களை செயல்படுத்தினாலும் திட்டங்கள் அனைத்தும் ரூ.2 கோடி வரை கடன் பெற தகுதி பெறும். விவசாயி, வேளாண் தொழில் முனைவோர் புதிதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனம் ஆகிய தனியார் துறைக்கு அதிகபட்சமாக 25 திட்டங்களுக்கு மட்டும் நிதி உதவி அளிக்கப்படும். இந்தத் திட்டம் குறித்து தொழில்முனைவோர், விவசாயிகள் உள்ளிட்டோரிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், வருவாய்த்துறையினர், வேளாண் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.