சேலம் மாநகராட்சியில் அனுமதி இல்லாமல் முறைகேடாக பெறப்பட்ட 30 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

சேலம் மாநகராட்சி பகுதியில் அனுமதி இல்லாமல் முறைகேடாக பெறப்பட்ட 30 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

Update: 2022-06-23 22:11 GMT

சேலம், 

குடிநீர் வினியோகம்

சேலம் மாநகராட்சி பகுதிக்கு மேட்டூர் அணையில் இருந்து தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் சீரான முறையில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தும் வகையில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்திட அனுமதியற்ற, முறைகேடாக பெறப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வலுத்தன.

30 இணைப்புகள் துண்டிப்பு

இதைத்தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் அனுமதி இல்லாமல் முறைகேடாக பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அதனை துண்டிக்கும் வகையில் அலுவலர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வார்டு வாரியாக ஆய்வுகள் மேற்கொண்டு குடிநீர் இணைப்புக்கு உரிய டெபாசிட் தொகை செலுத்தாமலும், வீட்டு உபயோகத்திற்காக குடிநீர் இணைப்புகளை பெற்றுக் கொண்டு வணிக நிறுவனத்திற்கு பயன்படுத்துவது போன்ற அனுமதி இல்லாமல் முறைகேடாக பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறைகேடான குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கும் வகையில் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வீட்டு உபயோகத்திற்கு என்று பெறப்பட்ட குடிநீர் இணைப்பில், உணவகங்கள், தியேட்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டு 30-க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்