வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை; கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
ரூ.2 ஆயிரம் லஞ்சம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனையை சேர்ந்தவர் தெய்வக்கண்ணு மகன் ஞானப்பிரகாசம் (வயது 38). இவர் வாரிசு சான்றிதழ் பெற கடந்த 2017-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். அப்போது பெரியகாப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த தாமோதரன் (47), கிராம உதவியாளர் ரவீந்திரகுமாரபாண்டியன் (59) ஆகியோர் வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டுமானால், தங்களுக்கு லஞ்சமாக ரூ.2 ஆயிரம் தர வேண்டும் என கூறினர்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஞானப்பிரகாசம், கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறிய அறிவுரைப்படி ஞானப்பிரகாசம் கடந்த 27.1.2017 அன்று ரசாயன பொடி தடவிய ரூ.2 ஆயிரத்துடன் பெரியகாப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த தாமோதரன், ஞானப்பிரகாசத்திடம் லஞ்சம் வாங்கிய போது போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த ரவீந்திரகுமாரபாண்டியனும் கைது செய்யப்பட்டார்.
கிராம உதவியாளருக்கும் சிறை
மேலும் இதுதொடர்பாக கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பிரபாகர் தனது தீர்ப்பில், தாமோதரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3ஆயிரம் அபராதமும், ரவீந்திரகுமாரபாண்டியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.