ரூ.10 நாணயத்தை பெற மறுத்தால் 3 ஆண்டு சிறை: ராமநாதபுரம் ஆட்சியர் அதிரடி
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
ராமநாதபுரம்,
கடந்த 2009 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை புழக்கத்தில் விட்டது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்தாலும் 10 ரூபாய் நாணயத்தை சிலர் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. அரசு பேருந்துகளில்கூட நடத்துனர்கள் வாங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டுக்களும் பயணிகள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.இந்த நிலையில்தான், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணி பரிமாற்றத்தின்போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும். அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.