பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலி

சிறுமுகையில் பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலியானார்கள்.

Update: 2023-02-11 18:45 GMT

மேட்டுப்பாளையம்

சிறுமுகையில் பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலியானார்கள்.

குளிக்க சென்ற பெண்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 64). இவரது உறவினர் சிறுமுகையில் புதிய வீடு வாங்கியுள்ளார். இதன் கிரகப்பிரவேசம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பாக்கியம், அவருடைய மருமகள் ஜமுனா (40), கஸ்தூரி, சகுந்தலா (50) ஆகியோர் நேற்று சிறுமுகையில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் மாலை 4 மணிக்கு சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பம்ப் ஹவுஸ் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அவர்களுடன், பாலகிருஷ்ணனும் வந்திருந்தார். பாக்கியம் உள்பட 4 பேரும் தண்ணீரில் இறங்கி குளித்தனர். பாலகிருஷ்ணன் கரையில் நிறுத்தி வைத்திருந்த தனது காரில் அமர்ந்திருந்தார்.

3 பேர் பலி

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற 4 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களது கூக்குரல் கேட்டு கரையில் இருந்து ஓடி வந்த பாலகிருஷ்ணன் ஆற்றில் குதித்து 4 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் ஆற்றில் மூழ்கி பாக்கியம், ஜமுனா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆற்று வெள்ளத்தில் சகுந்தலா அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இதற்கிடையில் அக்கம்பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடலை தேடும் பணி

இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பாக்கியம், ஜமுனா ஆகியோரது உடல்களை மீட்டனர். சகுந்தலாவின் உடலை தேடி வந்த நிலையில், இருள் சூழ தொடங்கியதால் அந்த பணியை தீயணைப்பு துறையினர் கைவிட்டனர். இன்று காலையில் மீண்டும் தேடும் பணி தொடர உள்ளது. 3 பெண்கள் பலியானது குறித்து சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த 3 பெண்கள் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவர்கள்

இதேேபான்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி உப்பு பள்ளம் பவானி ஆற்றில் நேற்று மாலை 3.30 மணியளவில் கோவையை சேர்ந்த 6 பள்ளி மாணவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

உடனே 4 மாணவர்கள் நீந்தி கரைக்கு வந்துவிட்டனர். மற்ற 2 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை கண்ட சக மாணவர்கள் கூச்சல் போட்டனர்.

தேடும் பணி நிறுத்தம்

மேலும் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், ஆற்றில் இறங்கி 2 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இருள் சூழ தொடங்கியதால், ேதடும் பணி கைவிடப்பட்டது. இதனால் 2 மாணவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கவுதம்(வயது 16) என்பதும், மற்றொருவர் சிங்காநல்லூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலையில் தேடும் பணி மீண்டும் நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் உறவினர்கள், சக மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்