3 வாலிபர்கள் கைது

கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டியில் ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-07-28 20:00 GMT

கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பகத்சிங் (வயது 33). கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளப்பட்டியில் கபடி போட்டி நடைபெற்றது. அதில் கபடி குழு உறுப்பினராக பகத்சிங் இருந்தார். அப்போது கபடி போட்டியில் அனுமதிப்பது தொடர்பாக பகத்சிங் என்பவரிடம் ராமன்செட்டிபட்டியை சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் கடந்த 24-ந்தேதி இரவு பகத்சிங் வீட்டுக்கு ராமன்செட்டிபட்டியை சேர்ந்த சிலர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். அவருடைய வீட்டின் கதவை கத்தி, அரிவாளால் தாக்கி சேதப்படுத்தினர். பின்பு ஊருக்குள் புகுந்து குடிநீர் தண்ணீர்தொட்டி, 5 மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்டவர்களை ேபாலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று ராமன்செட்டிபட்டியை சேர்ந்த அரவிந்தன் (23), பள்ளப்பட்டியை சேர்ந்த சத்ரியன் (24), குல்லலக்குண்டுவை சேர்ந்த பிரேம்குமார் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் ேதடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்