பள்ளியில் ஆசிரியர் அடித்ததாக 3 மாணவர்கள் புகார்; போலீசார் விசாரணை

பாளையங்கோட்டை பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள், ஆசிரியர் அடித்ததாக கூறி நேற்று அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2023-08-09 22:25 GMT

பாளையங்கோட்டையில் கிறிஸ்து ராஜா என்ற அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அங்கு பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் 3 பேர் நேற்று காலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீசார், பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி, பாளையங்கோட்டை போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஆசிரியர் அடித்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

ஆனால் பள்ளிக்கூடம் தரப்பில் கூறுகையில், "மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தனர். அதனை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அந்த ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்