பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடிய 3 மாணவர்கள் கைது
குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடிய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.;
குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் நாகலிங்கம்-தேவகி. 2 பேரும் ஒரு தனியார் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் கடந்த 14-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு, சாவியை வெளியே ஒரு மறைவிடத்தில் வைத்து விட்டு, மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது, வீடு திறந்து இருந்தது. பெட்டியில் வைத்திருந்த 2½ பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள், பணத்தை காணவில்லை. மர்மநபர் யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 16 வயது மற்றும் 12 வயது மதிக்கத்தக்க மாணவர்கள் 3 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கம், வெள்ளிப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.