பெண்ணாடம் அருகேமூதாட்டியிடம் 3 பவுன் நகை வழிப்பறி
பெண்ணாடம் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் நகையை மா்ம நபர்கள் வழிப்பறி செய்தனா்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அடுத்த மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் மின்னல்கொடி (வயது 60). மூதாட்டி. இவர் தான் வளர்த்து வரும் மாடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வயல்வெளி பகுதிக்கு ஓட்டிச்செல்வார்.
வழக்கம் போல் நேற்று காலை தனது மாடுகளை மேய்ச்சலுக்காக மின்னல் கொடி ஓட்டிச்சென்றார். அப்போது, விருத்தாசலம் - மோசட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், மின்னல்கொடி அணிந்திருந்த 3 பவுன்நகையை பறித்து சென்றுவிட்டனர்.
இது குறித்து அவர் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த கிராமப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.