(திருத்தம்)கொலையாளிகள் தப்பிச்செல்ல உதவிய 3 பேர் கைது
(திருத்தம்)கொலையாளிகள் தப்பிச்செல்ல உதவிய 3 பேர் கைது;
கோவை
கோவை கோர்ட்டு அருகே ஓட, ஓட விரட்டி ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் தப்பிச்செல்ல உதவிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோர்ட்டு அருகே கொலை
கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது 22). ரவுடியான இவர் மீது 20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கோவை கோர்ட்டில் வழக்கு ஒன்றில் கையெழுத்திடுவதற்காக வந்த கோகுலை கடந்த 13-ந்தேதி ஒரு கும்பல் அரிவாள், பட்டா கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். அப்போது தடுக்க வந்த அவரது நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
மக்கள் நடமாட்டம் நிறைந்த கோவை கோர்ட்டு அருகே நடந்த இந்த கொலை சம்பவத்தால் கோவையில் பதற்றம் நிலவியது. மேலும் கொலையாளிகள் ரவுடியை வெட்டிவிட்டு, தப்பிச்செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இதனால் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
7 பேர் பிடிபட்டனர்
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கொலையாளிகள் நீலகிரி மாவட்டத்தில் பதுங்கியிருக்கலாம் என்று தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தனிப்படையினர் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கோத்தகிரி போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் கும்பல் சிக்கியது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவை காந்திபுரம் சாஸ்திரி நகரை சேர்ந்த ஜோஸ்வா (23), டேனியல் (27), ரத்தினபுரியை சேர்ந்த எஸ்.கவுதம் (24), கணபதி லட்சுமிபுரத்தை சேர்ந்த ஹரி என்ற கவுதம் (24), பீளமேட்டை சேர்ந்த பரணி சவுந்தர் (20) ரத்தினபுரியை சேர்ந்த அருண்சங்கர் (21), சூர்யா (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 7 பேரையும், கோத்தகிரி போலீசார் கோவை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை அழைத்து கொண்டு, காரில் கோவைக்கு வந்தனர்.
2 பேர் மீது துப்பாக்கி சூடு
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி அருகே வந்த போது, எஸ்.கவுதம், ஜோஸ்வா ஆகியோர் வாந்தி வருவதாகவும், இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என கூறியதால் போலீசார் வாகனத்தை நிறுத்தினர். தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய 2 பேரும் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தல் தப்பி ஓடினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். அப்போது, தப்பியோடிய 2 பேரும், கீழே கிடந்த அரிவாளை எடுத்து, போலீஸ்காரர் யூசப் என்பவரை வெட்டினர். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேருக்கும் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரையும் பிடித்து, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்விரோதம்
தொடர்ந்து கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட கோகுலுக்கும், ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராமுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கோகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து குரங்கு ஸ்ரீராமை கொலை செய்தார். பின்னர் கோகுல் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், தங்களது நண்பரை கொன்றதால் வெளியில் வந்தவுடன் கோகுலை தீர்த்து கட்ட குரங்குஸ்ரீராம் நண்பர்களான ஜோஸ்வாவும், எஸ்.கவுதமும் முடிவு செய்தனர். இந்த நிலையில் தான் கோகுல் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவரது நடமாட்டத்தை நோட்டமிட்டு, கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்பட்ட கோகுல் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்யாமலேயே அவருடன் வாழ்ந்துள்ளார். அந்த பெண்ணை காதலர் தினத்தில் திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தார். இந்த நிலையில் தான் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 3 பேர் கைது
இந்த நிலையில் கொலையாளிகள் தப்பிச்செல்ல வாகனம் கொடுத்து உதவியதாக கணபதி பகுதியை சேர்ந்த விக்ரம் (25), விக்னேஷ் (24), கார்த்திக் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் கைதான டேனியல், அருண், பரணி சவுந்தர், சூர்யா, மற்றொரு கவுதம் ஆகியோர் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் காலில் குண்டுபாய்ந்த எஸ்.கவுதம், ஜோஸ்வா ஆகியோருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.