கடன் தொகை கட்டவில்லை என வேனை கடத்தி செல்ல முயன்ற 3 பேர் கைது

போரூர் சுங்கச்சாவடி அருகே கடன் தொகை கட்டவில்லை என வேனை கடத்தி செல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-10-21 04:15 GMT

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் கோபி (வயது 27). வேன் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களை இறக்கிவிட்டு அம்பத்தூர், ஒரகடம் நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரில் குடிபோதையில் வந்த 3 பேர், கோபியின் வேனை மறித்து, வேனுக்கு வாங்கிய கடனுக்கு உரிய தவணை தொகையை கட்டவில்லை என்பதால் வேனை எடுத்து செல்ல வந்திருப்பதாக கூறி கோபியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் வேனை எடுத்துச்செல்லவும் முயன்றார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், வேனை எடுத்து செல்ல முயன்ற 3 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் பிடிபட்ட 3 பேரும் அம்பத்தூரை சேர்ந்த பிரதீப் (31), திருவேற்காட்டை சேர்ந்த தீபக் (29), சதீஷ் (38) என்பதும், குடிபோதையில் காரில் வந்தவர்கள் கோபியின் வேனை மடக்கி தவணை பணம் கட்டவில்லை என நூதன முறையில் வேனை கடத்திச்செல்ல முயன்றதும் தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்