பாத்திர கடையில் பொருட்களை திருடிய 3 பேர் கைது
கும்பகோணத்தில் பாத்திர கடையில் பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பாத்திர கடையில் பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாத்திர கடை
கும்பகோணம் பாணாதுறை பக்தபுரி தெரு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 60). இவர் தனது வீட்டின் முன்புறம் பித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருவதால் கடையின் பின்புறம் உள்ள சுவரை இடித்து கட்டிட வேலைக்கான பொருட்களை எடுத்துச்செல்வதற்காக பாதை ஏற்படுத்தி உள்ளனர்.
பொருட்கள் திருட்டு
சாமிநாதன் வியாபார சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது அவரது கடையில் வேலை பார்க்கும் மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், இன்னம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், மற்றும் 2 பேர் சாமிநாதன் கடையில் இருந்த பித்தளை குத்து விளக்குகள், பூஜை பொருட்கள், செம்பு பாத்திரங்கள், பழைய பித்தளை பொருட்கள் உள்ளிட்ட ரூ.4.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர்.
3 பேர் கைது
இதுதொடர்பாக சாமிநாதன் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஆன்லைன் மூலம் ஆய்வு செய்தபோது, மேற்படி நபர்கள் பொருட்களை திருடி சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து சாமிநாதன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் ஆனந்தன், ராஜேஷ்குமார், மேலும் திருட்டு பொருளை வாங்குவதற்கு உதவியாக இருந்த முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.