விராலிமலை:
விராலிமலை தாலுகா கொடும்பாளூர், செட்டியப்பட்டி ஆகிய பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செட்டியபட்டியை சேர்ந்த துரைராஜ் (வயது 55), பெருமாள் (47) ஆகியோர் தங்களது வீடுகளில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இதேபோல் கொடும்பாளூர் சத்திரத்தை சேர்ந்த அப்பாவு மகன் நாகராஜ் (33) என்பவர் அவரது கடையில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக போலீசார் அவரையும் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் 19 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி, கீழாநிலைக்கோட்டை பகுதிகளில் கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழாநிலைக்கோட்டை அருகே முத்துப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த பொன்னையா (58) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து ெகாண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொன்னையா மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.