நிதி நிறுவன ஊழியர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது

சுரண்டை அருகே நிதி நிறுவன ஊழியர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-08-21 19:20 GMT

சுரண்டை:

சுரண்டை அருகே நிதி நிறுவன ஊழியர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிதி நிறுவன ஊழியர் கொலை

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரசிகாமணியை அடுத்த வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாகண்ணு. இவருடைய மகன் வைரவசாமி (வயது 30). இவருடைய மனைவி முத்துமாரி (23). இவர்கள் 2 பேரும் வீரசிகாமணியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த 19-ந் தேதி காலையில் வழக்கம்போல் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வீரசிகாமணி அருகே நடுவக்குறிச்சி சமத்துவபுரத்தை கடந்து சென்றபோது காரில் வந்த மர்மநபர்கள் வைரவசாமியை வழிமறித்து கம்பு, கற்களால் சரமாரியாக தாக்கிவிட்டு, முத்துமாரி அணிந்திருந்த நகையை பறித்துச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த வைரவசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நாடகம் அம்பலம்

இச்சம்பவம் தொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் துருவித்துருவி தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முத்துமாரி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்துவிட்டு, நகைக்காக கொலை நடந்ததாக நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து முத்துமாரியை போலீசார் கைது செய்து, நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

3 பேர் சிக்கினர்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மேற்பார்வையில், புளியங்குடி துணை சூப்பிரண்டு அசோக், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேசுவரி ஆகியோர் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து, முத்துமாரியின் முன்னாள் காதலன் வீரசிகாமணி வடக்குத்தெருவை சேர்ந்த தர்மர் மகன் இசக்கிமுத்து (29), அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் காளிராஜ் (25), கண்ணன் மகன் அங்குராஜ் (25) ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

அப்போது வீரசிகாமணி பெரியகுளத்து மலை அருகே கொலையாளிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 3 பேரையும் மடக்கிப்பிடித்து சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

அங்கு போலீசாரிடம் இசக்கிமுத்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நானும், முத்துமாரியும் கடந்த 10 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். இந்த நிலையில் முத்துமாரியை அவரது பெற்றோர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வென்றிலிங்கபுரத்தைச் சேர்ந்த வைரவசாமிக்கு மணமுடித்து விட்டனர். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எப்படியாவது வைரவசாமியை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் முத்துமாரியிடம் இதுகுறித்து பேசினேன். அவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்சினைகள் இருந்து வந்ததால் முத்துமாரியும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து எனது நண்பர்களான காளிராஜ் மற்றும் அங்குராஜ் ஆகியோரை அழைத்துக் கொண்டு கடந்த 19-ந் தேதி நடுவக்குறிச்சி டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு நடுவக்குறிச்சி வழியாக வீரசிகாமணிக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது முத்துமாரி தனது கணவருடன் பணி முடிந்து திரும்பிக் கொண்டு இருப்பதாக என்னிடம் செல்போன் மூலம் தகவல் கூறினார். இதையடுத்து அங்கு சென்று அவர்கள் இருவரையும் மடக்கி நகைகளை கொள்ளையடிப்பது போல் நடித்து வைரவசாமியை சவுக்கு கட்டை மற்றும் பாறாங்கற்களால் தாக்கிக் கொன்றோம். நாங்கள் தப்பி சென்று விட நினைத்தோம். ஆனால் போலீசார் எங்களை மடக்கி பிடித்து விட்டனர்.

இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இசக்கிமுத்து உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்