சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
மயிலாடுதுறை அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்;
மயிலாடுதுறை அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாராயம் விற்பனை
மயிலாடுதுறை திருவிழந்தூர் கழுக்காணிமுட்டம் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாராயம் விற்ற ஒருவரை போலீசார் பிடித்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சாராயம் விற்றவர் கழுகாணிமுட்டம் புது காலனி தெருவை சேர்ந்த தமிழ்மணி மனைவி சுமத்திரா (வயது 27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமத்திராவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
2 பேர் கைது
இதேபோல திருவிழந்தூர் ஆடியபிள்ளையார் கோவில் தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ரகு (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் சாலையில் சாராயம் விற்ற குதிரை வண்டி குமார் என்கிற குமார் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் இருந்தும் தலா 55 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.