கொத்தனாரை தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது

தக்கலை அருகே கொத்தனாரை தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது ெசய்யப்பட்டனர்.;

Update: 2023-10-19 18:45 GMT

கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார்

தக்கலை, 

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை, திட்டுமேல்கோணம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் ராபர்ட் (வயது38), கொத்தனார். இவர் சில தினங்களுக்கு முன்பு முளகுமூட்டில் உள்ள ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அங்கு கூட்டமாவு பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான ராஜா என்ற சுரேஷ்குமார் (வயது44) என்பவருக்கும், அருண் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அருணுக்கு ஆதரவாக எட்வின் ராபர்ட் பேசினார். இதனால் இவருக்கும் சுரேஷ்குமாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் எட்வின் ராபர்ட் தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது ராணுவ வீரரான சுரேஷ்குமார், ஜெகன்குமார் (33), பள்ளியாடியை சேர்ந்த ஜெரிக் (36) ஆகியோர் அங்கு வந்து தகராறு செய்து எட்வின் ராபர்டை கம்பி மற்றும் வெட்டுகத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த எட்வின் ராபர்ட் சாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமார், ஜெகன்குமார், ஜெரிக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் ஒடிசா மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஒடிசாவுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இந்தநிலையில் கொத்தனாரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்