போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கத்திமுனையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-02-18 16:27 GMT

43 பவுன் நகை கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். ரியல் எஸ்டேட் அதிபர். அவருடைய மனைவி கலையரசி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த டிசம்பர் 25-ந்தேதி இரவு சீனிவாசன் வீட்டில் இல்லை. இதனை நோட்டமிட்ட 15 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்தனர்.

பின்னர் அவர்கள், 2 குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து கலையரசியை மிரட்டி, வீட்டில் இருந்த 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரையும், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

போலீஸ்காரர்

கைது செய்யப்பட்டவர்களில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா உத்தப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சண்முகசூர்யா என்பவரின் மனைவி ஜோதியும் (வயது 36) ஒருவர். இவர், கொள்ளை கும்பலின் தலைவி போல் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

பெரம்பலூர் மாவட்டம் நேர்குளம் மேற்குதெருவை சேர்ந்த செல்வகுமார் (47) என்பவரும் ஒருவர். இவர், சென்னையில் போலீஸ்காரராக பணிபுரிந்தார். பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இவர், பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவர் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டு இருக்கிறார்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த பாலசுப்பிரமணி என்ற பாலு (45) என்பவருக்கும் கொள்ளையில் முக்கிய பங்கு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

குண்டர் சட்டத்தில் கைது

கைதான ஜோதி நிலக்கோட்டை மகளிர் சிறையிலும், செல்வகுமார், பாலு ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கலெக்டர் விசாகனிடம் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் அவர்கள் 3 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து நிலக்கோட்டை, திண்டுக்கல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஜோதி, செல்வகுமார், பாலு ஆகிய 3 பேரையும் மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்