வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.;

Update: 2023-10-01 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

லாரி மோதல்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பொய்கை அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பழனிவேல் (வயது 35). கொத்தனாரான இவர் சம்பவத்தன்று மாமந்தூர் பஸ் நிறுத்தம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த லாரி பழனிவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொறு விபத்து

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வீரப்பார் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் ராஜேந்திரன் (37). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் சென்று விட்டு, உளுந்தூர்பேட்டை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார். திருவெண்ணெய்நல்லூர் அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராஜேந்திரன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண் பலி

மயிலம் அருகே பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி சுசீலா (வயது 58). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலம் அடுத்த தென் பசாரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் நேற்று அங்கிருந்து பெரமண்டூர் வருவதற்காக தென்பசாரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சசீலா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுசீலா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்