போதை பொருள் விற்ற தம்பதி உள்பட 3 பேர் கைது

கோவை போத்தனூரில் உயர்ரக போதை பொருட்களை விற்பனை செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-17 20:00 GMT


கோவை,


கோவை போத்தனூரில் உயர்ரக போதை பொருட்களை விற்பனை செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


போலீசார் ரோந்து


கோவை மாநகர பகுதியில் கஞ்சா, புகையிலை, கஞ்சா சாக்லெட் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போத்தனூர் போலீசார், போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் ரோந்து சென்றனர்.


3 பேரிடம் விசாரணை


அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்துக்கு இடமாக 3 பேர் நின்றிருந்தனர். உடனே போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.


அதில் அவர்கள், போத்தனூரை சேர்ந்த ஷாஜகான் (வயது 33), அவருடைய மனைவி மரியா (29), புல்லுக்காடு யாசிக் (25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்ததில், அவர்கள் பெங்களூரு பகுதியில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.


உயர்ரக போதை பொருட்கள்


இதை தொடர்ந்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து உயர்ரக போதை பொருளான 15 கிராம் மெத்தபெட்டமைன், 100 போதை மாத்திரைகள், 4 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.


இதையடுத்து போலீசார் ஷாஜகான், மரியா, யாசர் ஆகிய 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்