செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த காட்டு தோவாதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சுரேஷ் (வயது 26). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சித்தாமூரில் இருந்து செய்யூர் நோக்கி மோட்டார் சைக்கிளில சென்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து சித்தாமூர் நோக்கி வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுரேஷின் மனைவி சரளா சித்தாமூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை விசாரித்து வருகிறார். இறந்து போன சுரேசுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு விபத்து
விழுப்புரம் மாவட்டம் பக்கிரிபாளையத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் கிரிதரன் (வயது 20) இவரது நண்பர் ஜெயக்குமார் (20). இவர்கள் இருவரும் நேற்று சென்னையில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த நேர்முக தேர்வுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் என்ற இடத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கிரிதரன் சம்பவத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவரது நண்பர் ஜெயக்குமார் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் கிரிதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிரிதரனின் மாமா வீரராகவபெருமாள் அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஒரு விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த வெங்கலேரி கிராமத்தை சேர்ந்தவர் மதன் (வயது 18). தனியார் கல்லூரி மாணவர். இவர் தன்னுடைய நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருப்போரூர் மலைக்கோவில் நுழைவாயில் அருகே பின்னால் வந்த டேங்கர் லாரி மோதியதில், மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த நண்பர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்போரூர் போலீசார் மதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.