மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
கொடைக்கானலில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கொடைக்கானல் கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் சேகர். கடந்த 12-ந்தேதி இவர், தனது வீட்டின் முன்பு சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அவர், கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கேரள மாநிலம் மலப்புரத்தில், சேகரின் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை மாற்றி மர்ம நபர்கள் ஓட்டி வருவது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடைக்கானலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொடைக்கானல் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டபோது சந்தேகத்தின் பேரில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது சாதிக் (வயது 22), முகமது பிலால் (22), திருச்சூரை சேர்ந்த ஜித்தின் (19) என்று தெரியவந்தது. இவர்கள் ஓட்டி வந்த 2 மோட்டார் சைக்கிள்களும் திருடப்பட்டதாகும். கடந்த 10-ந்தேதி இவர்கள் கோவையை சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிளை திருடி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருக்கின்றனர். கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 2 நாட்கள் தங்கியிருந்து சேகரின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.