பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்ற தம்பதி உள்பட 3 பேர் கைது
சேலத்தில் பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்றது தொடர்பாக தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
பச்சிளம் பெண் குழந்தை
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை சேலத்தில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சாதாரண உடையில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
3 பேர் சிக்கினர்
நேற்று மதியம் 3 மணி அளவில் 2 பேர், சீலநாயக்கன்பட்டி பகுதியில் நின்ற பெண்ணிடம் குழந்தை ஒன்றை துணியில் சுற்றி கொடுத்தனர். இதனை மறைந்து இருந்து கண்காணித்த போலீசார் உடனே 3 பேரையும் சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்தது பச்சிளம் பெண் குழந்தை என்பது தெரிய வந்தது.
உடனே போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி அவர்கள் குழந்தையை விற்க முயன்றது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் விசாரித்த போது, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு குச்சிபாளையம் தேக்கவாடி பகுதியை சேர்ந்த மதியழகன் (வயது 38). அவருடைய மனைவி வளர்மதி (25). இவர்களது நண்பர் ஈரோடு சாஸ்திரி சாலை அணைக்கட்டு பகுதியை சேர்ந்த குமார் மனைவி லதா (35) என்பது தெரிந்தது. ஆனால் அவர்கள் குழந்தையை சேலத்தில் யாரிடம் விற்பனை செய்ய வந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.
கைது
இதற்கிடையே பிடிபட்ட 3 பேரையும் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் கொண்டலாம்பட்டி போலீசார் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் குழந்தையை விற்பனை செய்ய முயற்சி, குழந்தை கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வளர்மதி, அவருடைய கணவர் மதியழகன், லதா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சேலம் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கைதான லதா, வளர்மதி இருவரும் குழந்தை விற்பனை செய்யும் புரோக்கர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த ஒருவர், தனக்கு குழந்தை இல்லை என்றும், பெண் குழந்தை கொடுத்தால் ரூ.5 லட்சம் தருவதாக லதாவிடம் கூறி உள்ளார். லதாவும், தன்னுடைய தோழியான வளர்மதியிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
சாதுர்யமான ேபச்சு
வளர்மதியும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் யார், யாருக்கெல்லாம் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது என்ற விவரங்களை சேகரித்தார். அப்போதுதான், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ராமராஜ் என்பவருடைய மனைவி கஸ்தூரிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பக்கத்து மாவட்டமான ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது.
இதனை அறிந்த வளர்மதி, கஸ்தூரியை சந்தித்து சாதாரணமாக பேச்சு கொடுத்துள்ளார். வளர்மதியின் சாதுர்யமான பேச்சை கேட்ட கஸ்தூரி, தன்னுடைய குடும்ப விவரங்களை அப்பாவித்தனமாக கூறியுள்ளார். அப்போது தனக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருப்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள தன்னுடைய அக்காள் வீட்டுக்கு வந்து விட்டேன்.
கணவரை பிரிந்து வரும் போது கர்ப்பமாக இருந்த போதிலும் என்னுடைய கணவர் என்னை வந்து சந்திக்கவில்லை. இப்போது எனக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் என்னை வந்து சந்திப்பார் என்ற நம்பிக்கை இல்லை. எப்படி இந்த குழந்தையையும் வளர்க்க போகிறேன் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
ரூ.5 லட்சம் பேரம்
அப்போது பெண் குழந்தை தந்தால் ரூ.5 லட்சம் தருவதாக வளர்மதி ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் 3-ம் பெண் குழந்தை எப்படி வளர்க்க போகிறாய். அதை விடுத்து நான் தரும் 5 லட்ச ரூபாயை வைத்து மற்ற குழந்தைகளை வளர்க்கலாம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார் வளர்மதி. முதலில் யோசனை செய்த கஸ்தூரி, கணவரை பிரிந்து வாழ்வதாலும், 3-வதும் பெண் குழந்தையாக பிறந்ததாலும் வளர்மதியின் பேச்சுக்கு சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி குழந்தையை சேலத்தில் உள்ள ஒருவருக்கு விற்க கொண்டு வரப்பட்ட போது எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சாதாரண உடையில் இருந்து 3 பேரையும் கையும், களவுமாக பிடித்துள்ளோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
கும்பலுடன் தொடர்பா?
கைதான 3 பேருக்கும் குழந்தை விற்பனை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. குழந்தையை ஈரோட்டில் இருந்து சேலம் கொண்டு வந்துள்ளனர். முதல் கட்டமாக ஏதும் பணம் கைமாறியதா அல்லது மொத்த தொகையும் கொடுக்கப்பட்டுள்ளதா?. இதுதவிர புரோக்கர்களுக்கு கமிஷன் தொகை ஏதும் கொடுக்கப்பட்டுள்ளதா? உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ரூ.5 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை செய்ய நடந்த முயற்சியில் தம்பதி உள்பட 3 பேர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.