அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்கள் மோதல்
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டன.;
ஈரோடு மாவட்டம் நம்பியூர்-கோபி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவஞானம்(வயது 21). கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடன் படிக்கும் காஞ்சீபுரம் மாவட்டம் தில்லை கங்கா நகர் பகுதியை சேர்ந்த ராமநாதன்(22), கொடைக்கானலை சேர்ந்த கெவின்(22) ஆகியோருடன் பொள்ளாச்சிக்கு வந்தார். அதில் சிவஞானம் ஒரு மோட்டார் சைக்கிளிலும், ராமநாதன் மற்றும் கெவின் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர். கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவை அடுத்த கல்லாங்காட்டு புதூரில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, சிவஞானம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் அவரது நண்பர் ராமநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மேலும் அதற்கு பின்னால் கோவை ராம்நகரை சேர்ந்த சபரி கோகுல்(30) ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதியது. அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதன், கெவின், சபரி கோகுல் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். சிவஞானம் காயமின்றி தப்பினார். இதையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.