'அரிக்கொம்பன்' யானையை பிடிக்க 3 கும்கிகள் வருகை; வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்த ‘அரிக்கொம்பன்’ யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.;
தேனி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட கிராமங்களில் 'அரிக்கொம்பன்' என்று பெயரிட்டு அழைக்கப்படும் காட்டு யானை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8 பேரை கொன்றதாகவும், ஏராளமான விளை பயிர்களையும் நாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த காட்டு யானை கடந்த மாதம் 29-ந்தேதி கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது.
இந்த யானை நேற்று முன்தினம் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. பின்னர் யானை, நள்ளிரவில் சாமாண்டிபுரம் வழியாக முல்லைப்பெரியாறு நோக்கி சென்றது. அப்போது முல்லைப்பெரியாற்றில், அது உற்சாகமாக குளியல் போட்டது.
அதன்பிறகு வயல்வெளி வழியாக சுருளிப்பட்டிக்கு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் நுழைந்தது. செல்லும் வழியில், சுருளிபட்டி சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் பலா மரத்தில் காய்த்து தொங்கிய பலா காய்களை தின்று தீர்த்தது.
அதன்பிறகு சுருளிப்பட்டியில் யானைகஜம் என்ற பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் கம்பிவேலியை சாய்த்துவிட்டு 'அரிக்கொம்பன்' உள்ளே நுழைந்தது. தொடர்ந்து முன்னாள் எம்.எம்.ஏ.யும், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வன் தோட்டம் வழியாக கூத்தனாட்சியாறு வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது அந்த யானை அங்கேயே முகாமிட்டுள்ளது.
3 கும்கிகள் வருகை
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் ஹைவேவிஸ் மலைப்பகுதியை நோக்கி அரிக்கொம்பன் யானை இடம்பெயர்ந்தது.
இதற்கிடையே 'அரிக்கொம்பன்' யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப், ஆணைமலை பகுதிகளில் இருந்து சுயம்பு, உதயன், அரிசி ராஜா என்ற முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கம்பத்துக்கு வரவழைக்கப்பட்டன. சுயம்பு கும்கி யானை நள்ளிரவிலும், மற்ற 2 கும்கி யானைகளும் நேற்று காலையிலும் கம்பத்துக்கு வந்தடைந்தன. அவை என்.எம்.ஆர். நகரில் குமுளி சாலையோரம் புளியந்தோப்பில் கட்டிப் போடப்பட்டன.
'அரிக்கொம்பன்' யானை வனப்பகுதியை விட்டு ஊருக்கு புகுந்தால் அதனை கும்கி யானைகள் மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக அது வனப்பகுதியை நோக்கி சென்றால், அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுருளிப்பட்டியில் 144 தடை உத்தரவு
யானை நுழைந்ததால் சுருளிப்பட்டி மற்றும் நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி பகுதிகளுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கம்பம் அருகே சுருளிப்பட்டியில் சிறந்த சுற்றுலா தலமான சுருளி அருவி உள்ளது. யானை நடமாட்டம் உள்ளதால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கும்கிகளை புகைப்படம் எடுக்க ஆர்வம்
'அரிக்கொம்பன்' யானையை பிடிப்பதற்காக வரவழைக்கப்பட்ட 3 கும்கி யானைகளும், கம்பத்தில் குமுளி சாலையில் உள்ள புளியந்தோப்பில் கட்டிப்போடப்பட்டுள்ளன. இந்த கும்கி யானைகளை பார்ப்பதற்காக கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் திரண்டு வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கும்கி யானைகளை புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கம்பம் போலீசார் மற்றும் வனத்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டிரோன் மூலம் படம் எடுத்தவர் கைது
கம்பத்தில் நேற்று முன்தினம் 'அரிகொம்பன்' காட்டு யானை ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. அந்த யானையை டிரோன் கேமரா மூலம் படம் எடுத்த, சின்னமனூரை அடுத்த சீப்பாலக்கோட்டையை சேர்ந்த ஹரிஹரன் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.