துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய போது சோகம்.. லாரி-கார் நேருக்கு மோதியதில் 3 பேர் பலி
திருவண்ணாமலை அருகே பால் வாகனம்-கார் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வந்தாராவல்லி கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் (வயது 65). அவரது மனைவி அவரஞ்சி (60), மகன் பழனி (39) மற்றும் உறவினர்கள் தங்கவேலு, மகாலிங்கம் ஆகிய 5 பேரும் திருக்கோவிலூர் பகுதிக்கு காரில் துக்க நிகழ்விற்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.
அப்போது செங்கம் அடுத்த தண்டம்பட்டு அருகே வந்தபோது பெங்களூரில் இருந்து தண்டராம்பட்டு நோக்கி வந்த பால் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் சென்ற சின்னபையன் அவரது மனைவி அவரஞ்சி நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த மற்ற மூன்று பேரும் பலத்த காயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பழனி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் இருவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து மேல்செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். செங்கம் அருகே அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.