ரூ.3½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்

ஆலங்குடியில் ரூ.3½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.;

Update: 2023-09-06 17:58 GMT

வளர்ச்சி திட்ட பணிகள்

ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட களங்குடி, தெட்சிணாபுரம், வேங்கிடகுளம், கோவிலூர் மாஞ்சான்விடுதி, கே.வி.கோட்டை, புதுக்கோட்டைவிடுதி ஆகிய ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தலைமை தாங்கினார்.

மேற்கு, கிழக்கு ஒன்றிய தலைவர்கள் தங்கமணி, அரு.வடிவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான உஷா செல்வம், திருவரங்குளம் ஒன்றிய ஆணையர் ஆயிஷா ராணி கோகுலாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பூமி பூைஜயை தொடங்கி வைத்தார்.

சாலை அமைக்கும் பணிகள்

களங்குடி நபார்டு திட்டத்தின் கீழ் பாலகுடிப்பட்டியில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் புதிய பாலம் மற்றும் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பிலான பணிகள், தெட்சிணாபுரம் ஊராட்சியில் எம்.ஜி.எம்.எஸ்.டி. திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்தில் வேங்கிடகுளம்-வல்லத்திராகோட்டை சாலை முதல் கடையான்தோப்பு சாலை பணிகள், கோவிலூரில் என்.ஜி.எம்.எஸ்.டி. திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்தில் மைக்கேல்பட்டி சாலையும், மாஞ்சான்விடுதி எம்.ஜி.எம்.எஸ்.டி. திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்தில் புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலை முதல் வீரப்பட்டி சாலை பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

கே.வி.கோட்டை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பிலான பணிகள், எம்.ஜி.எம்.எஸ்.டி. திட்டத்தின் கீழ் ரூ.14½ லட்சத்தில் சூத்தியன்பட்டி சாலை அமைக்கும் பணி, புதுக்கோட்டைவிடுதி எம்.ஜி.எம்.எஸ்.டி. திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்தில் மேலநெம்மக்கோட்டை பிள்ளையார் கோவில் பின்புறம் ஏ.டி.காலனி சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

வருகிற 15-ந்தேதி ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் உலக அளவிலும், இந்திய அளவிலும் இல்லாதது தமிழகத்தில் மட்டும் தான் இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உங்களது வங்கியில் பணமும் வரப்போகிறது. பெண்களுக்கு கட்டணம் இல்லாத பஸ் பயணமும், நமது பள்ளி குழந்தைகளுக்கு 1 முதல் 5-வகுப்பு வரை காலை உணவு திட்டத்தையும் முதல்-அமைச்சர் தந்துள்ளார்.

ஆலங்குடி-புதுக்கோட்டை ஒருவழி சாலையாக உள்ளதை, தற்போது இருவழி சாலையாக மாற்றி 10 நிமிடத்தில் புதுக்கோட்டை செல்லும் அளவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார். விரைவில் அதுவும் நடைபெறுவதற்கான வாய்ப்பு உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சேவியர், சுரேஷ் கண்ணன், மங்களம் மெய்யர், அகஸ்டின், ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர்கள், நகர செயலாளர் பழனிகுமார் மற்றும் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி லூர்து நாதன், சுப்பையா, கருணாஸ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சரவணன், அரசு அலுவலர்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்